சகுனம் பார்த்தல்

நல்லகாரியம் எதைச் செய்யக் கிளம்பினாலும் சகுனம் பார்ப்பது முக்கியமாகும். நாம் செய்யப் புறப்படும் காரியம் வெற்றியைக் கொடுக்குமா அல்லது தோல்வியைத் தருமா என்பதை சகுனம் மூலமாகவே தெரிந்து கொண்டு விடலாம்.
புதுமனையில் கட்டடவேலையை ஆரம்பிப்பதற்காக செல்லும் போதும் மனை முகூர்த்தம் செய்வதற்காகச் செல்லும் போதும், கிரகப்பிரவேசம் செய்யப் புறப்படும் போதும் காணப்படும் சகுனங்களைக் கவனிக்க வேண்டும். எல்லா வகையான சகுனங்களுக்கும் பலன் உண்டு.
மனையை நோக்கிப் புறப்படும்போது இளவயதும் அழகும் இலட்சுமிகடாட்சமான முகமும் மெலிவான மேனியும் கருத்த கூந்தலும் கொண்ட சுமங்கலிப்பெண் எதிரே வந்தால் அது நல்ல சகுனமாகும். மனையில் கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் எல்லா வகையான நன்மைகளையும் பெறுவார்கள்.

இரண்டு பசுக்கள் குறுக்கே வந்தால் அது நல்ல சகுனமாகும். அதேபோல் எதிரே சவஊர்வலம் வந்தாலும் தலைக்கு மேல் கருடன் வலப்பக்கத்திலிருந்து இடது பக்கமாக வட்டமிட்டாலும் அவையும் நல்ல சகுனங்களே.
எதிரே விதவைப்பெண் வந்தால் அது தீய சகுனம் ஆகும். எதிரே எருமை மாடுகள் வந்தாலும் வியாதியஸ்தர்கள் வந்தாலும் அவையும் தீய சகுனங்களே.
வீடு கட்டும் மனையை அடையும்போது பல்லி வலப்புறத்திலிருந்து சொன்னால் அங்கு வீடுகட்டி வாழ்பவர்களின் வாழக்கை, அமைதியும் நிம்மதியும் நிறைந்தவையாக இருக்கும்.
பல்லியானது இடது பக்கதிலிருந்து சொன்னால் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் மிகுந்த செல்வத்துடன் பிறரை அதிகாரம் செய்யும் அந்தஸ்துடனும் வாழ்வார்கள்.
மனையை அடையும்போது அங்கு வெள்ளைப் பசு அல்லது வெண்ணிறக் காளை மேய்ந்து கொண்டிருப்தைக் காண நேர்ந்தால் அங்கு வீடுகட்டி வாழ்பவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும். வேகமான முன்னேற்றம் உண்டாகும் .
மனையில் வெள்ளைப்புறாவைக் காண நேரிட்டால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் வெண்ணிறக் கோழியைப் பார்க்க நேர்ந்தால் உறவினர்களின் உதவியும் ஆதரவும் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
வீடு கட்டப்படும் மனையை அடையும்போது எதிரே ஒணான் வந்தால் அது தீய சகுனமாகும். அதே போல் பூமியை வண்டுகள் துளைப்பதைப் பார்ப்பதும் கெட்ட சகுனமாகக் கருத வேண்டும். அங்கு வீடு கட்டி வாழ்பவர்கள் வறுமையாலும் வியாதிகளாலும் பாதிக்கப்படுவார்கள்.
மனையில் கறுப்பு நிறப் பசு அல்லது காளையைப் பார்ப்பது கெட்ட சகுனமாகும். அதேபோல் அங்கு கறுப்பு நிறப் புழுவைக் காண்பதும் கெட்ட சகுனம். அத்தகைய சகுனங்கள் தென்பட்டால் கட்டட வேலையை உடனே ஆரம்பிக்கக்கூடாது. அதை மூன்று அல்லது நான்கு நாட்களுக்குத் தள்ளிப் போட வேண்டும்.
மனையில் நுழையும் போது அங்கு எறும்புகள் வரிசையில்லாமல் செல்வதைப் பார்க்க நேரிட்டால் அது தீய சகுனமாகும். அன்றைய தினம் கட்டட வேலையை ஆரம்பிக்க கூடாது.
கட்டட மனையில் நுழையும்போது காக்கைகள் கத்திக் கொண்டே வலதுபுறத்திலிருந்து இடது பக்கமாகப் பறந்து சென்றால் அது நல்ல சகுனமாகும். வீடு கட்டுபவருக்கு ஏதேனும் துன்பங்கள் இருந்தால் அவை நீங்கி நற்பலன்களாக நடைபெறத்தொடங்கும்.
அதேபோல் கட்டட மனைக்குள் நுழையும் போது கோழி, கிளி, பசு, கொக்கு, அணில், கழுதை, நரி, வேங்கை, முயல் போன்றவை வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக ஒடுவதும் நல்ல சகுனங்களே.
மனைக்குச் சென்றுகொண்டிருக்கும் போது அல்லது மனைக்குள் நுழையும்போது குடிகாரன் பிச்சைக் காரன், கூனன், முடவன், குருடன், நொண்டி, சிதைந்த மூக்கைக் கொண்டவன், சுடுகாடு காக்கும் வெட்டியான், வலையை வைத்துக் கொண்டிருக்கும் வலைஞன், செக்காட்டுபவன் போன்றவர்களைக் காண்பது தீய சகுனமாகும்.
அதேபோல் அழுக்கான ஆடைகளை அணிந்தவன், செம்பட்டைமுடி கொண்டவன், ஒற்றைக்கண் பெற்றவன், கூந்தலை விரித்துப் போட்டிக் கொண்டிருக்கும் பெண் கையில் தடி வைத்திருப்பவன், சன்யாசி போன்றவர்களைப் பார்ப்பதும் தீய சகுனங்களாகவே கருதப்படவேண்டும்.
வீடுகட்டும் மனைக்குச் சென்று கொண்டிருக்கும் போது அல்லது மனைக்குள் நுழையும்போது நிறைகுடம் தாங்கிய சுமங்கலி, யானை, தனிமனித்ச்ன், சலவைத் தொழிலாளி, குதிரை, சிவந்த நிற ஆடைகளை அணிந்த கிழவி, பால், நெய், நீர், இறைச்சி, தயிர்குடம், மதுக்குடம், போன்றவை எதிர்பட்டால் இது மிகவும் நல்ல சகுனமாகும். அங்கு வீடு கட்டிவர்களுக்கு செல்வமும் செல்வாக்கும் நிறைந்த வாழ்க்கை அமையும்.

Advertisements

Leave a Reply